அம்மாவின் சிறுவாட்டு காசுக்கு சிறகுகள் கிடையாது! -அன்னையர் தின சிறப்புப் பகிர்வு

ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் ஆட்டம் காணும் போதெல்லாம், `விடுங்க, பார்த்துக்கலாம்.’ என்ற ஒற்றை வார்த்தையில் குடும்பத்தின் நம்பிக்கையை மீட்டெடுப்பது அந்தக் குடும்பத்தின் பெண்களாகத்தான் இருக்கும். நாம் எல்லோருமே ஒரு காலகட்டத்தில், நம்முடைய தேவைக்காக, அப்பாவுக்கு தெரியாமல், அம்மாவிடம் காசு வாங்கிய தருணங்கள் நிச்சயம் இருக்கும்.

அம்மா

அம்மா, வேலைக்குப் போகவில்லை என்றாலும், அம்மாவிடம் காசு இருக்கும் என்ற நம்பிக்கை ஒருபோதும் பொய்த்தது இல்லை.

`ஏன்கிட்ட, ஏது அவ்வளவு காசு’னு தொடங்கி, `இந்தா இவ்வளவுதான் இருக்கு’னு அலுத்துக்கொண்டு, நம் கைகளில் ரூபாய் நோட்டுகளைத் திணிக்கும் அம்மாவின் அந்த அன்பை அனுபவிக்காத நபர்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு அம்மாவின் சிறுவாட்டு சேமிப்பு கதையை, உங்களின் நினைவலைகளோடு ரீவைண்ட் செய்துகொண்டே, வாசிக்கலாம் வாருங்கள்…

“இப்போது இருப்பது போன்ற மாடர்ன் பர்ஸ் எல்லாம் அம்மா சுமந்தது இல்லை. பழைய கிழிந்த பர்ஸை சுருட்டி, நெஞ்சுக்கூட்டில்தான் மறைத்து வைத்திருப்பார். அந்த பர்ஸில், பல நாள்களுக்கு முன்னால் மடித்த குங்குமப்பேப்பர் தொடங்கி, அப்பாவின் போன் நம்பர் எழுதிய பேப்பர் வரை அம்மாவின் சேமிப்புக் களஞ்சியம் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும். அவ்வப்போது அம்மாவுக்குத் தெரியாமல் அந்த பர்ஸில் சிணுங்கும் சில்லறைகளிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தேன் மிட்டாய் வாங்கித் தின்றது உண்டு. அதைத் திருட்டு என மூளை சொன்னாலும், அம்மா மீதான உரிமை என்ற இப்போது வரை மனசு சொல்கிறது.

அம்மா / Representational Image

வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாக காசும் அம்மாவிடம் இருந்தாலும், `என்னங்க காய் வாங்க அம்பது ரூபா எடுத்துக்கிறேன்’, `பாலு வாங்க இருபது ரூபாய் எடுத்துக்கிறேன்’ என்று அப்பாவிடம் கேட்டு செலவழிப்பதில் அம்மாவுக்கு ஒரு ஆத்மதிருப்தி என்பதைவிட, அப்பாக்களுக்குப் பொறுப்புகள் இருக்கு என்பதை நினைவூட்டும் நிமிடங்கள் என்றும் சொல்லலாம். இப்படி கேட்டு எடுத்து செலவழிப்பதில்தான் அம்மாவின் சேமிப்பும் தனியாகத் தொடங்கும். அப்பாவிடம் கேட்டு எடுத்த அம்பது ரூபாய்க்குமே காய்கறிகள் வாங்கிவிடுவார். பின் அதில் பேரம் பேசி, எப்படியேனும் ஐந்து ரூபாயைக் குறைத்துவிடுவார் அம்மா.

பொருள்கள் வாங்க கடைக்குக் கொடுத்தனுப்பும் காசில் பொருள்கள் போக மீதியுள்ள காசை வாங்குவதில் அம்மா எப்போதும் கறார் பார்ட்டிதான். பழைய துணிகளை எடைக்கு போட்ட காசு, பழைய புத்தகங்கள், பேப்பர்களை எடைக்குப் போட்ட காசு என அம்மா சில்லறைகளை சேர்க்கும் விதம், ஒவ்வொரு நாளும் புதுப்புது டெக்னிக்காகதான் இருக்கும். அப்படி மிச்சப்படுத்திய அந்த ஐந்து ரூபாய் காசை முந்தியில் முடிந்து வைத்து, யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பா, சீரக டப்பா, புளி ஜாடிக்கு அடியில் என அங்காங்கே பதுக்கி வைப்பதில் அம்மா, ராஜ தந்திரத்தையே தோற்கடித்துவிடுவார். அம்மா, வீட்டில் இல்லாத நேரத்தில் அந்தக் காசை எங்கு தேடியும் ஒரு முறை கூட கிடைத்ததேயில்லை.

அம்மா

ஆசை ஆசையாக அம்மா சேர்க்கும் அந்த சிறுவாட்டு காசு, அம்மாவுக்காக ஒருபோதும் சிறகு முளைத்தது கிடையாது. வளையல், தொடங்கி, சேலை வரை எத்தனையோ தேவைக்காக அம்மா, வீடு முழுவதும் இருக்கும் காசைத் தேடி எடுப்பார். ஒவ்வொரு காசாக எண்ணிவிட்டு, `வெளிய நிக்கிற சேலைக்காரர்கிட்ட, அம்மா, வேணாம்னு சொன்னதா சொல்லிருனு சொல்லுவாங்க. இந்தக் காசை வெச்சு என்னதான் பண்ணப்போறாங்க. ஆசைப்பட்டதை வாங்க வேண்டியது தானேனு பல முறை எனக்கு கோவம்கூட வந்திருக்கிறது. ஆனால், பள்ளிக்கு பீஸ் கட்டுவது தொடங்கி, குடும்பத்தில் மாதக்கடைசியில் பட்ஜெட்டில் துண்டு விழும் நேரத்தில் அம்மா, தன் பங்கைக் கொடுக்கும்போது, அம்மா, எங்களுக்காக கரியரைத் துறந்த நேரத்தையும் ஈடு செய்த பெருமிதத்தை அம்மாவின் முகத்தில் பல முறை பார்த்திருக்கிறேன்.

குடும்பத்துடன் திருவிழாவுக்குச் செல்லும்போது, அம்மா தன் சேமிப்புக் காசை, இறுக முடிந்து எடுத்து வருவார். அதில் எனக்கு வளையலும், அண்ணணுக்கு பம்பரமும் வாங்கிக் கொடுக்கும் போது, அம்மாவின் முகத்தில் அவ்வளவு கர்வம் இருக்கும்.

அம்மா

பள்ளியிலிருந்து பாடம் சார்ந்த சில திரைப்படங்களைப் பார்க்க தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட அப்பா ஐந்து ரூபாய் கொடுத்தாலும், என்னை தனியே அழைத்து, `இந்தா, எதுக்கும் இந்த ஒத்த ரூவாயை வெச்சுக்க, பத்திரமா திரும்பிக் கொண்டு வந்துரணும்’னு சொல்லுவாங்க அம்மா. அப்படி நான் கொண்டுவந்த அந்த ஒரு ரூபாய் மீண்டும் கடுகு டப்பாக்குள் முடங்கிவிடும். கடனாக வாங்கிய தொகையை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை அம்மா அன்றே பழக்கியிருக்கிறார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.

சில்லறைகளைப் பக்கத்து கடையில் கொடுத்து நோட்டாக மாற்றி, குலுக்கல் சீட்டு கட்ட ஆரம்பித்தார் அம்மா. காசை மறைத்து மறைத்து எடுத்துப்போவதை ஒரு முறை நான் பார்த்துவிட்டேன். `அப்பாவுக்கு தெரியாம இதுவேற பண்றாங்களா? மாட்டி விட்டரணும்’னு நினைத்தது உண்டு. ஆனால், தம்பிக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, சிறிதும் யோசிக்காமல் அம்மாவின் கால்கள், சீட்டுக்குலுக்குபவரின் வீட்டு வாசலில்தான் நின்றன. சிறுவாட்டு காசு சீட்டுக்காசாக மாறி பல இக்கட்டான சூழலில் குடும்பத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது.

அம்மா

என்னுடைய படிப்பு தொடங்கி, புது வீடு கட்டியது வரை எல்லாவற்றிலும் அம்மாவின் சிறுவாட்டு காசு கைகொடுத்திருக்கிறது. அம்மா சேர்த்து வைக்கும் சிறுவாட்டு காசுதான் அம்மாவின் பெருமை, நம்பிக்கை, பலம். இக்கட்டான சூழலில், அம்மா தன் இருப்பையும் குடும்பத்தில் பதிவு செய்வதற்கான ஆயுதம். அம்மாவின் அந்த சிறுவாட்டு பழக்கம் தான், சேமிப்பை எனக்கு அறிமுகப்படுத்தியது. உண்டியல் காசில் தொடங்கி, மியூச்சுவல் ஃபண்ட் வரை சுழலும் ஆர்வத்தைக் கொடுத்தது. ஆயிரம் சேமிப்பு வழக்கம் இருந்தாலும், அம்மாவின் சிறுவாட்டு சேமிப்புக்கு எப்போதும் உயிர்ப்பு அதிகம். எப்போதும் போல் அம்மாதான் அனைத்துக்கும் ஆரம்பம்… அம்மாக்களைக் கொண்டாடுவோம்.

இவ்வுலகை அன்பால் இயக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

உங்கள் அம்மாவின் சிறுவாட்டு சேமிப்பின் நெகிழ்ச்சியான நிமிடங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.