தர்மசாலா: ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க நுழைவுவாயிலில் காலிஸ்தான் கொடியை மர்ம நபர்கள் கட்டி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து தகவல் அறிந்ததும், நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவரில் கட்டப்பட்டிருந்த காலிஸ்தான் கொடி அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரவோடு இரவாக, தர்மசாலாவில் உள்ள சட்டசபை வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டி சென்ற கோழைத்தனமான சம்பவத்திற்கு வன்மையாக கண்டிக்கிறேன். இங்கு, குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடக்கிறது. இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.
பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, கோழைகள் இச்செயலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். இந்த சம்பவத்தை செய்தவர்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். இரவில் தயங்காமல், பகலில் வெளியே வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
கங்கரா மாவட்ட போலீஸ் எஸ்.பி., குஷால் சர்மா கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் இருக்கலாம். நள்ளிரவு அல்லது அதிகாலையில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருக்கலாம். தகவல் அறிந்ததும் உடனடியாக கொடி அகற்றப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement