சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான அசானி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் காலை கரையைக் கடந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
இதற்கிடையே, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேலூர், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும்.
கேரளா, லட்சத்தீவு, குமரிக் கடல்பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.