ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆட்சிகளில் அரசு ஊழியராக மாநில அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருப்பவர்களை களையெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசியராக பணியாற்றி வரும் அல்டாப் உசைன் பண்டிட், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் முகமது மக்பூல் ஹஜம், காவலர் குலாம் ரசூல் ஆகிய 3 பேரை ஜம்மு காஷ்மீர் அரசு பணிநீக்கம் செய்துள்ளது.
இதற்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் கற்பித்து வந்த அல்டாப் பண்டிட், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் நெருங்கியத் தொடர்புடையவர் என்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயற்சி பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பிலும் இவர் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்காக கல்வீச்சு மற்றும் வன்முறைப் போராட்டங்களை ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத பிரச்சாரம் செய்யப்பட்டதிலும் 3 மாணவர்கள் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
ஆசிரியர் முகமது மக்பூல் ஹஜம் தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு மறைமுக உதவியாளராக செயல்பட்டுள்ளார். இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளார். சோகம் நகர காவல் நிலையம் மற்றும் பிற அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இவரும் ஒருவர். அரசு ஆசிரியராக இருந்து கொண்டே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போலீஸ் காவலர் குலாம் ரசூல், தீவிரவாதிகளுக்கு மறைமுக உதவிகளை செய்து வந்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்த தகவலை தீவிரவாதிகளுடன் பகிர்ந்து வந்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பு பணியில் ஈடுபடுவோரின் பெயர்களை கசிய விட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஷ்தாக் அகமது என்கிற அவுரங்சீப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.