நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு… குட்டு வைத்த ஐகோர்ட்டு..! 10 வருட வனவாசத்துக்கு முற்றுப்புள்ளி

10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மனைவி செல்ல பாப்பா. இவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் தனது மகன் ரமேஷ் உடன் வசித்து வருகிறார்.

இவரது இரண்டாவது மகனான ஜெகதீசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணிபுரிந்த கோமதி என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் கிரமத்து பெரியவர்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள சூழலில் அந்த ஊர் குடிபாட்டு கோயிலான மாசி பெரியண்ணசாமி கோவில் திருவிழா சமயத்தில்,
காதல் திருமணம் செய்துகொண்ட ஜெகதீசனிடம் தலைக்கட்டு வரியை அவ்வூர் முக்கியஸ்தர்கள் வசூல் செய்வதை தவிர்த்தனர். காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்ல பாப்பாவின் குடும்பத்தை ஊரை விட்டு நாட்டாமை தள்ளிவைத்தார்.

குடும்பத்தினர் நேரில் சென்று முக்கியஸ்தர்களிடம் முறையிட்டும் வரிவசூல் செய்யப்படவில்லை. இதனையடுத்து சிறுகனூர் காவல் நிலையத்தில் கடந்த 15 ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் முக்கியஸ்தர்கள் தங்கள் கருத்தில் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

தற்போது நடைபெற்று வரும் மாசி பெரியண்ணசாமி, ஸ்ரீகாமாட்சி, அம்மன் பெரும்பூஜை விழாவிற்கு செல்ல பாப்பா குடும்பத்தினரிடமிருந்து குடி பாட்டு வரி வாங்க முக்கியஸ்தர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த சூழலில் செல்லபாப்பாவின் மகன் ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஊர் நாட்டாமை பெரிய ராமசாமி, முக்கியஸ்தர்கள் சின்னச்சாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவரித்த ரமேஷ், 120 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் வழிபட உரிமை உள்ளதாகவும், தம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கோவில் விழாவில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். காவல்துறை உரிய வழிபாடு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாய் செல்ல பாப்பா பேசுகையில்,ஆண்டாண்டு காலமாய் தலைமுறை தலைமுறையாய் கோவிலில் வழிபாடு நடத்தி வருவதாக கூறினார். வழிபாடு நடத்த அனுமதிக்காததால் வேண்டுதல்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றும், குடி பாட்டு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவை பெற்று தர வேண்டுமென்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

காதல் திருமணத்துக்கு எதிரான நாட்டாமை தீர்ப்பை மாற்றச்சொன்னதோடு நாட்டாமை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கிராமங்களில் நடக்கின்ற கட்டப் பஞ்சாயத்துகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.