சென்னை: குட்கா, பான் மசாலா முதலான போதைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், நோய் பாதிப்பைக் குறைக்கவும் இந்தப் பொருட்களின் விற்பனைக்கு கடந்த 2010-ம் ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையும் மீறி இந்தப் பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்களைத் தடுக்க பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற மெல்லும் போதைப்பொருட்களுக்காக தடை கடந்த 23-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த தடையை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவின்படி, இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது, பதுக்கி வைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.