‘உங்கள் ஆதார் கார்டின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம். அதற்கு மாறாக முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் ஆதார் கார்ட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியிருந்தது.
மேலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஆதார் கார்டை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம்.

இது பற்றி விளக்கம் கூறிய யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம், “ஆதார் காரட்டை போட்டோஷாப் செய்து தவறுதலாகச் சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே இது குறித்த ஓர் எச்சரிக்கையாக மட்டுமே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க, உங்களின் முழு விவரங்களைக் காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்தாமல் நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்துங்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், இந்த அறிவிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள காரணத்தால் உடனடியாக இந்தச் செய்திக் குறிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். ஆதார் பற்றிய விவரங்களை அரசு பாதுகாப்புடன் வைத்திருக்கிறது” என்று கூறியுள்ளது.