நேஷனல் ஹெரால்ட் நாளிதழை, ராகுல், சோனியாவுக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இந்த விசாரணையானது, இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாகவே, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என பலகட்ட போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், ராகுல்காந்தி இன்றும் விசாரணைக்கு ஆஜரானால் போராட்டம் தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராகுல், சோனியா மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து பா.ஜ.க-வை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
I condemn the outrageous act of political vendetta against Congress party and its leaders Tmt Sonia Gandhi and Thiru @RahulGandhi by the ruling BJP govt using the Enforcement Directorate. (1/2)
— M.K.Stalin (@mkstalin) June 14, 2022
அந்த ட்விட்டர் பதிவில், “அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி, காங்கிரஸ், அதன் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது ஆளும் பா.ஜ.க நடத்தும் மூர்க்கத்தனமான அரசியல் பழிவாங்கும் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சாமானியர்களின் நெருக்கடியான பிரச்னைகளுக்குப் பதில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே இது போன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பா.ஜ.க பயன்படுத்துகிறது. அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டுமே தவிர, அமலாக்கத்துறையைக் கட்டாயப்படுத்தி எதிர்க்கக்கூடாது” என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த வழக்கில், சோனியா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக வேறு நாளில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் எனத் தெரிகிறது.