அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: 6 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹைலாண்டு பார்க் : அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பின் போது மர்ம நபர் சுட்டதில், ஆறு பேர் உயிரிழந்தனர். நேற்று அமெரிக்காவின் 246வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டம் கொடி கட்டிப் பறந்தது.

சுதந்திர தின விழா

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரம் அருகே, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.இங்கு, ‘ஹைலாண்டு பார்க்’ பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த அணிவகுப்பை ஏராளமானோர் ரசித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களும், கூடியிருந்த மக்களும் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் குழந்தைகளுடன் வேகமாக ஓடியபோது கால் இடறி விழுந்து படுகாயம் அடைந்தனர். முதியவர்கள் ஓட முடியாமல் தடுமாறி விழுந்தனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விசாரணையில், கொலையாளியின் பெயர் ராபர்ட் கிரிமோ, 22, என்பது தெரிய வந்துள்ளது. அணிவகுப்பு நடந்த இடத்தில், ஒரு கட்டடத்தில் இருந்து அவர் சுட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொலையாளி விட்டுச் சென்ற துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.மிக சக்தி வாய்ந்த அந்த துப்பாக்கியை யார் கடைசியாக விற்பனை செய்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கொலையாளியைப் பிடிப்போம்.

அதிர்ச்சி

குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். படுகாயம் அடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையாளி பதுங்கியுள்ளதால், இப்பகுதியில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். இந்த கோர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மகிழ்ச்சியான நாளை சோகமாக்கிய கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.