கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. கல்வியில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனத் தடைகளைத் தகர்த்து சாதித்து வருபவர்கள் பலர்.
பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தான் கண்ட கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார், பீகார் மாநிலம், புல்வாரிசெரிப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரேம்குமார். இவரின் திறமையைக் கண்ட அமெரிக்க கல்லூரி ஒன்று, இவரின் மேற்படிப்புக்காக 2.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

பிரேம் குமாரின் தந்தை தினக்கூலி வேலை செய்பவர். பிரேம் குமார் தற்போது 12-ம் வகுப்பு முடித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், விடாமுயற்சியோடு படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அதோடு பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்துக்கான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதை அறிந்த அமெரிக்காவின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான லாஃபயேட் கல்லூரி (Lafayette College), தங்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயில 2.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியுதவி அமெரிக்காவில் தங்குவது, டியூஷன் கட்டணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ், பயணச் செலவுகள் முதலியவற்றை உள்ளடக்கியது.
லாஃபயேட் கல்லூரி மூலம் வழங்கப்படும் டையர் ஃபெல்லோஷிப்புக்கு (Dyer Fellowship) இந்தாண்டு உலகம் முழுவதிலும் இருந்து 6 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதாவது, மாணவர்களின் ஈடுபாடு, உலகின் மிகவும் கடினமான, சவாலான பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை வைத்தே மாணவர்கள் இந்த நிதியுதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவராக பிரேம்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“குமாரின் சாதனை, கிராம மக்களைப் பெருமைப்பட வைத்துள்ளது. பின்தங்கிய தன்னுடைய சமூகத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்ற குமாரின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்” என வாழ்த்துகள் தெரிவித்துள்ளார், லாஃபயேட் கல்லூரியின் டீன் மேத்யூ எஸ். ஹைட்.
“என் பெற்றோர் பள்ளிக்குச் சென்றதில்லை. வெளிநாட்டில் தங்கிப் படிக்க எனக்கு நிதியுதவி கிடைத்தது அதிசயமாக உள்ளது. பீகாரில் மகாதலித் குழந்தைகளுக்காக வேலை செய்து வரும் டெக்ஸ்டரிட்டி குளோபல் அமைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களால்தான் இன்று எனக்கு இந்த வெற்றி கிட்டியது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.