திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மடவாளம் அருகே கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு கூறியது: ‘‘திருப்பத்தூரில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மடவாளம் கிராமத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாங்கள் களஆய்வு நடத்தினோம். அப்போது, சோழர்களின் குல தெய்வச்சிலை, மூத்த தேவி சிற்பம், தலைப்பலி நடுகற்கள் ஆகியவற்றை கண்டறிந்தோம்.
இந்த ஊரில் உள்ள ஏரியின் கீழ்ப்புறம் வயல்வெளியில் ஒரு சிறிய பாறை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இயற்கையாக அமைந்த இந்த பாறையின் முகப்பில் 10-க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்து வரிகள் கொண்ட பழமையான கல்வெட்டு இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அந்த கல்வெட்டை சுத்தம் செய்து வாசிக்க முயன்ற போது அதிலிருந்த எழுத்துக்கள் சற்று சிதைந்த நிலையில் இருந்ததால் அதன் பொருள் அறிய முடியவில்லை. இந்த பாறையின் ஒரு முகப்பில் கல்வெட்டும், மறுமுகப்பில் அழகிய சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு இக்கல்வெட்டானது, போசள மன்னர்களின் ஒருவரான ‘வீர ராமநாதனின்’ ஆட்சிக்காலத்தை சேர்ந்ததாகும்.
இந்த மன்னர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ‘குந்தாணியை’ தலைநகராக கொண்டும், திருச்சி அடுத்த கண்ணூரைப் (இன்றைய சமயபுரம்), படைத்தளமாகவும் கொண்டு ஆட்சி செய்த மன்னர் ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி.1254-1295 ஆகும். மடவாளத்தில் உள்ள இக்கல்வெட்டு இந்த மன்னரது 5-வது ஆட்சியாண்டில் எழுதப்பட்டதாகவும். அதாவது, கி.பி.1259ல் எழுதப்பட்டதாகும்.
வீர ராமநாதனின் படைத்தளபதியாக விளங்கியவரும் மாடப்பள்ளி பகுதியின் பிரதானியுமான ஸ்ரீ வல்லான தண்ணாக்கன் (தண்டநாயகன்) இந்த கல்வெட்டினை பொறித்துள்ளார். அவரது ஆணைப்படி இந்த ஊரின் ஏரிப்பாசனத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட அளவு நிலத்தினை விதைத்து மாடப்பள்ளியில் உள்ள சிவன் கோயில் இறைக்காரியங்களுக்கு செலவிட கொடையாக கொடுத்த செய்தியை இது விவரிக்கிறது.
மாடப்பள்ளி சிவன் கோயில் என்பது மடவாளம் அங்கநாதீஸ்வரர் கோயிலாக இருக்கக் கூடும். இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும். திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகளை எடுத்துரைக்கும் இது போன்ற அழிவுறும் நிலையில் உள்ள எண்ணற்ற ஆவணங்களை மீட்டெடுக்கும் பணியில் எங்களது குழுவினர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் இதில், சிறப்பு கவனம் செலுத்தி இது போன்ற வரலாற்று சுவடுகளை முறையாக பாதுகாக்க முன் வரவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்’’ என்றார்.