ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால் குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் இதுபோன்ற குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறுக்கு வழி அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
குறுக்கு வழி அரசியல் செய்பவர்கள் புதிய விமான நிலையங்களைக் கட்ட மாட்டார்கள், புதிய நவீன நெடுஞ்சாலைகளைக் கட்ட மாட்டார்கள். குறுக்குவழி அரசியல் செய்பவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடுமையாக உழைக்க மாட்டார்கள். பாஜக அரசு அரசியல் கலாசாரம், நிர்வாக மாதிரியை கொண்டு வந்திருக்கிறது.

இந்தியா பக்தி, ஆன்மிகம் மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. நம்பிக்கை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்த அரசு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நாங்கள் தொடங்கியிருக்கும் திட்டங்கள் ஜார்கண்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.