முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் 1996-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Dastak’ என்னும் படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து 1997-ல் நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக ‘ரட்சகன்’ என்னும் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது. இதுவரை அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
எனவே இப்போது திரைப்படங்களில் நடிப்பதைத் தள்ளி வைத்துவிட்டு முழுநேரமாக தனது இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் காதல் குறித்துப் பேசியிருந்தார். ஆனால் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.
Just back in london after a whirling global tour #maldives # sardinia with the families – not to mention my #better looking partner @sushmitasen47 – a new beginning a new life finally. Over the moon. . In love does not mean marriage YET. BUT ONE THAT For sure pic.twitter.com/WL8Hab3P6V
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
இந்தச் சூழலில் நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் 56 வயதான தொழிலதிபர் மற்றும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங்கில் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து நேற்று இரவு லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், தற்போது இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென், தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நான் மகிழ்ச்சியானதொரு இடத்தில் இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு அடையாளமாக என் விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. அளவற்ற அன்பு என்னைச் சூழ்ந்துள்ளது அவ்வளவுதான், வேறொன்றுமில்லை. நான் இப்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன் என்பதை இங்குத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.