புதுடெல்லி: அரசியல் எதிர்ப்பு பகையாக மாற்றப்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் தான் தலைமை நீதிபதி என்வி ரமணா இந்தக் கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் தனது பேச்சில் தலைமை நீதிபதி என்வி ரமணா, “அரசியல் எதிர்ப்பை பகையாக மாற்றக்கூடாது. இவை ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளங்கள் அல்ல. இதை வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாக நாங்கள் சமீபத்திய நாட்களில் பார்த்து வருகிறோம்.
அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே எதிர்ப்பிற்கான இடம் குறைந்து வருகிறது. அதேபோல், துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் சட்டம் இயற்றும் அவைகளின் செயல்பாட்டின் தரம் கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. விரிவான விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன” என்று அதிருப்தி தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் பகையால் அதிகரித்து வரும் கைதுகள் தொடர்பாகவும் தனது அதிருப்தியை இந்தக் கூட்டத்தில் பதிவு செய்தார் தலைமை நீதிபதி என்வி ரமணா. எந்தவொரு தனிப்பட்ட வழக்கையும் மேற்கோள் காட்டாமல், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள செயல்முறையை “தண்டனை” என்று குறிப்பிட்ட அவர், “அரசியல் பகையால் செய்யப்படும் அவசர மற்றும் கண்மூடித்தனமான கைதுகளில் ஜாமீன் பெறுவதில் சிரமம் உண்டாகிறது. விசாரணை கைதிகளை நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படும் செயல்முறையில் இப்போது கவனம் தேவைப்படுகிறது.
ஏனென்றால், நாட்டில் உள்ள 6.10 லட்சம் கைதிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். எந்த விசாரணையும் இன்றி அதிக எண்ணிக்கையில் மக்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். எனவேதான், இந்த விவகாரத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய வாரங்களில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் மற்றும் மராத்தி நடிகர் கேதகி சித்தாலே ஆகியோர் அரசியல் பகை தொடர்பாக கைது செய்யப்பட்டதாக ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இந்தக் குற்றச்சாட்டுக்கு குறிப்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மத்தியில் தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சு கவனம் பெற்றுள்ளது.