லக்னோ: லக்னோவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சிலர் மத வழிபாடு செய்ததால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், மால் நிர்வாகத்தினர் மத வழிபாட்டுக்கு தடை விதித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள் திறந்தவெளியில் வழிபாடு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வைரலானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அகில பாரதிய இந்து மகாசபா, மால் அருகே ஹனுமான் சாலிசாவை ஓத உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது. இதுகுறித்து இந்து மகாசபா செய்தித் தொடர்பாளர் சிஷிர் சர்துர்வேதி, `குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. எனவே பிற சமூகத்தினரும் பிரார்த்தனை செய்ய மால் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், பிரபல வணிக வளாக நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், `எந்தவொரு மத வழிபாடும் வளாகத்தில் அனுமதிக்கப்படாது’ என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இதில், லுலு மாலில் வழிபாடு நடத்தியதாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
