புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், பாஜ கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 61 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி தரப்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான பழங்குடி பிரிவைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் 776 பேரும், எம்எல்ஏக்கள் 4,033 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10.86 லட்சம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவர் வெற்றி பெற்றவர் ஆவார்.முர்முவுக்கு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அதிமுக, தெலுங்கு தேசம், சிரோண்மணி அகாலி தளம், மஜத, சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் போது, ஆதரவு 50 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது, முர்முவின் வாக்கு பலம் 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை பொறுத்த வரையில், நாடாளுமன்றம் மூலமாக 180 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. அதிலும், முர்முவுக்கு சாதகமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசி வருவதால் அவரது திரிணாமுல் கட்சியின் 36 எம்பி.க்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தற்போதைய நிலையில், யஷ்வந்த சின்காவுக்கு நாடாளுமன்றம் மூலமாக 1.5 லட்சம் வாக்குகளும், எம்எல்ஏக்கள் மூலமாக 1.5 லட்சம் வாக்குகளும் என 3 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்படும்.ஜேஎம்எம் முடிவால் கூட்டணியில் குழப்பம: ஜார்க்கண்ட்டில் ஆட்சி செய்யும், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள போதிலும், பாஜ வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஜார்க்கண்ட்டில் பிறந்தவர், முர்முவோ ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தவர், முக்கியமான பழங்குடி பிரிவை சேர்ந்தவர். ஜேஎம்எம் கட்சி பழங்குடி இனத்தினருக்கானது. முதல்வர் ஹேமந்த் சோரன், முர்முவின் சாந்தல் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர். இதனால் மண்ணின் மைந்தனா, பழங்குடி விசுவாசமா என்ற சிக்கலான விஷயத்தில், கூட்டணியை மீறி முர்முவுக்கு ஆதரவு தந்துள்ளது ஜேஎம்எம் கட்சி. இதனால் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், ஜேஎம்எம் கட்சி பாஜவுடன் நட்பு பாராட்டத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் ‘0’: பல மாநிலங்களில் முர்முவுக்கு பலத்த ஆதரவு இருந்தாலும், அவருக்கு கேரளாவில் இருந்து ஒரு ஓட்டு கூட கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் இருந்து மக்களவையில் பாஜ.வுக்கு ஒரு எம்பியும் கிடையாது. மாநிலங்களவையில் முரளீதரன், ராஜீவ் சந்திரசேகர் ஆகிய 2 பாஜ எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் முறையே, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். இதேபோல், பாஜவுக்கு ஒரு எம்எல்ஏவும் கிடையாது. எனவே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், எதிர்க்கட்சியான காங்கிரசும், பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்பதால், பாஜ வேட்பாளர் முர்முவுக்கு கேரளாவில் இருந்து ஒரு ஓட்டு கூட கிடைக்காது.
