’முதியவர்களின் கொடூர மனத்தால் இளம் தம்பதியர் குற்றவாளிகள் ஆகிறார்கள்’ – நீதிமன்றம் வேதனை

இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்துவதற்கு, வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், அகங்காரம், கொடூர மனதால் குற்றவாளிகள் ஆகக்கூடாது என்றும், சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும், 2001-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, 45 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையை, சீதனமாக பிரியா குடும்பத்தினர் வழங்கினர்.
திருமணத்துக்கு முன், தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்வதாக்கூறி, ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. மூன்று மாதங்களுக்கு பின், குமாரவேல் எலெக்ட்ரீஷியன் வேலை செய்வதாகவும், அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதும் தெரியவந்தது. இதனால், இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இதற்கிடையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, அவ்வவ்போது பிரியாவை துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா, கடந்த 2013 ஆகஸ்ட்டில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், குமாரவேல் மற்றும் அவரது தாய் மலர்கொடி (51) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
image
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குமாரவேல் மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இறந்த பெண்ணின் பெற்றோருக்கு, அபராத தொகையில் 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, வீட்டில் இருக்கும் முதியவர்கள், இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனவும், அகங்காரம், கொடூர மனத்தால், இருவரும் குற்றவாளிகள் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.