கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் – டி.ஜி.பி

Kallakuruchi Girl student death case transferred to CBCID: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவி குதித்து மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததற்கான அடையாளம் இல்லை. மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர்.

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்: தி.மு.க ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை: எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

மாணவியின், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (ஜூலை 16) வெளியான நிலையில், அந்த அறிக்கை போலியானது என்று கூறி மாணவியின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இருப்பினும், மாணவியின் பெற்றோர், மகளின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.  இதனிடையே, சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, நீதி கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், கல்வீச்சு, பேருந்துகளுக்கு தீவைப்பு என கலவரமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி மற்றும் டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அனைத்து சந்தேகங்களையும் கலைய அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என உள்துறைச் செயலாளர் கூறினார்.

டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறுகையில், மாணவி மரண வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி உள்ளிட்ட 52 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும் நிலைமையை சரியான முறையில் கையாண்டுள்ளோம்.

இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு மேல் விசாரணைக்காக, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் தாக்கப்பட்ட வழக்கு தனி வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறினார்.

போராட்டம் முன்னேற்பாட்டுடன் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உளவுத்துறை கணிக்க தவறிவிட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போலீஸார் சரியான கணித்ததால் தான் சிறிய அளவிலான சேதங்களுடன், உயிரிழப்புகள் ஏதும் இன்றி வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம், வன்முறை தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்படும். சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடைபெறும். என்று டி.ஜி.பி கூறினார்.

தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் குறித்த கேள்விக்கு, இது ஒரு பள்ளிக்கு நடந்த சம்பவம், அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தாது, அனைத்து பள்ளிகளுக்கும் போதுமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை செயலாளர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.