சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி பள்ளியில் உள்ள விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தார் எனக் கூறி, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்ததாகக் கூறி, அன்றைய தினமே பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த சில தினங்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி உயிரிழந்ததற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவி உயிரிழப்புக்கு முன்னரே உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் கை, கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தோடு, முக்கிய உறுப்புகளான இருதயம், கல்லீரல் உள்ளிட்ட 5 உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையேயான சாலை மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர். அப்போது இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் பள்ளி உள்ள இடத்திற்கு செல்ல முயன்ற போது, போலீஸார் அவர்களை தடுப்புக் கட்டைகளை அமைத்து தடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதையும் மீறி வந்தபோது, போலீஸார் தடியடி நடத்தியதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநீாதா, சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர்.
இளைஞர்களின் போராட்டம் தீவிரமைடந்த நிலையில், காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக அப்பகுதி முழுவதுமே கலவரக்காடாக மாறியது. தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள், வகுப்பறைகள், கண்ணாடி ஜன்னல்கள், கணினி மற்றும் லேப்டாப்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இந்நிலையில், மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலைந்திரபாபு மற்றும் உள்துறை செயலாளர் பணிந்தர்ரெட்டி தெரிவித்துள்ளனர்.
வன்முறை களமாக்கப்பட்ட பள்ளி வளாகத்தை இன்று மாலை உள்துறை செயலர் பணிந்தர் ரெட்டி மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து சைலைந்திரபாபு அளித்த பேட்டியில், ‘‘மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், செயலாளர் உள்ளிட்ட மூவரையும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 70 நபர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சென்று வன்முறை சம்பவத்தில் காயமடைந்த காவலர்களையும், உயிரிழந்த மாணவியின் உடலையும் பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.