தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை முதல் சைலேந்திர பாபு ஆய்வு வரை – லேட்டஸ்ட் தகவல்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.
“நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது”
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேரிட்ட தாக்குதலை தொடர்ந்து “தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லை” எனக் கூறி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“விதிகளை மீறி தனியார் பள்ளிக்கு விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை”
“நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித தகவலும், முன் அனுமதியும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தில் பெறவில்லை. நாளை பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாக இல்லை. முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கலவரப் பகுதிகள்:
சின்னசேலம் கனியாமூர் பகுதியில் கலவரம் நடந்த தனியார் பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், திருச்சி வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
சின்னசேலம் வந்தார் டிஜிபி:
தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் காரணமாக சின்ன சேலம் முதல் கள்ளக்குறிச்சி எல்லை வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது கலவர பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து மீண்டும் வாகனங்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. தற்போது கலவரம் நடந்த தனியார் பள்ளியில் தமிழக உள்துறை செயலர் பணிந்தரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக தனியார் பள்ளி விளக்கம்:
இச்சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அப்பள்ளியின் செயலாளர் சாந்தி அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவர் “பள்ளி மாணவ, மாணவிகளின் உடைமைகள், சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். பள்ளி தற்போது காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

நாளை சின்ன சேலம் செல்கிறார் அமைச்சர் ஏ.வ.வேலு:
இந்நிலையில் நாளை கள்ளக்குறிச்சிக்கு மூத்த அமைச்சர் ஏ வ வேலு நேரில் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள நிலவரம் குறித்து பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைப்பு குறித்து  அவர் ஆய்வு செய்ய இருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.