புதுடெல்லி: எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லை எனக் கூறியுள்ளார் நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடி.
ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்ற நடிகை சுஷ்மிதா சென் உடன் லலித் மோடி டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகின. இருவரும் வெளிநாடுகளில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை லலித் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது வைரலாகி பேசுபொருளாக மாறியதுடன் லலித் மோடி குறித்து விமர்சனங்கள் அதிகமாகின.
விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் லலித் மோடி ஒரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘பிறப்பிலேயே டைமண்ட் ஸ்பூன் உடன் பிறந்தவன் நான். 2005, நவம்பர் 29 எனது பிறந்தநாள் அன்று பிசிசிஐயில் சேர்ந்தேன். அன்று பிசிசிஐ வங்கி கணக்கில் இருந்த தொகை ரூ.40 கோடி. ஆனால் பிசிசிஐ என்னை தடை செய்யும்போது அதன் வங்கி கணக்கில் இருந்த தொகை ரூ.47,680 கோடி. நான் எந்த லஞ்சமும் பெறவில்லை. எந்த அரசிடமும் உதவி கேட்கவில்லை.
அனைவரும் நான் தலைமறைவாக இருப்பதாக பேசுகிறார்கள். எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.