புதுடில்லி-பாகிஸ்தானின் ராவல்பிண்டியில், சிறு வயதில் வாழ்ந்த மூதாதையர் வீட்டை காண ஆசைப்பட்ட, புனேயைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியின் கனவு நிறைவேறியது.
போர் பதற்றம்
மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்தவர் ரீனா சிப்பர் வர்மா, 90. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன், இவரது குடும்பம், பாக்.,கின் ராவல்பிண்டியில் வசித்தது. 1947 பிரிவினைக்கு பின் இந்தியாவில் குடியேறியது. அப்போது ரீனாவுக்கு 15 வயது. 1965ல் மீண்டும் பாகிஸ்தான் சென்று, தன் மூதாதையர் வீட்டை காண, ரீனா ஆசைப்பட்டார்.அப்போது, இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் நிலவியதால், ‘விசா’ மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தன் மூதாதையர் வீட்டை காண ஆசைப்படுவதாக, ரீனா தன் சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவிட்டார். பாக்.,கைச் சேர்ந்த சஜத் ஹைதர் என்பவர், ராவல்பிண்டியில் உள்ள வீட்டை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். பாக்., செல்ல விசா கேட்டு மூதாட்டி ரீனா சமீபத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பாக்., வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானியை இணைத்து, தன் ஆசையை சமூக வலைதளத்தில் ரீனா பதிவிட்டார். அந்நாட்டு அமைச்சர் தலையிட்டு, மூதாட்டி ரீனாவுக்கு மூன்று மாத விசா கிடைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து, வாகா எல்லை வழியாக, மூதாட்டி ரீனா நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்றார்.
‘வீடியோ’
அங்கிருந்து ராவல்பிண்டியில் உள்ள, ‘பிரேம் நிவாஸ்’ என்ற தன் மூதாதையர் இல்லத்தையும், தான் படித்த பள்ளி, பழைய நண்பர்களை காண ஆவலுடன் சென்றார்.மூதாட்டி ரீனா சிப்பர் வர்மா தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட ‘வீடியோ’வில் கூறியிருப்பதாவது:இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, ராவல்பிண்டியின் தேவி கல்லுாரி சாலையில் எங்கள் குடும்பம் வசித்தது. நானும், என் நான்கு சகோதர, சகோதரிகளும் மாடர்ன் பள்ளியில் படித்தோம்.
![]() |
எங்களை காண எங்கள் முஸ்லிம் நண்பர்கள் வீட்டுக்கு வருவர். நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வோம்.பிரிவினைக்கு முன், ஹிந்து – முஸ்லிம் வேறுபாடு கிடையாது. எல்லோரும் ஒற்றுமையுடன் பழகுவர். பிரிவினை செய்தது மிகப்பெரிய தவறு. இனியாவது, இரு நாடுகளுக்கு இடை யிலான விசா வழங்கும் நடை முறையை எளிதாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்