புதுடில்லி:துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரை வேட்பாளராக அறிவித்து உள்ளது; இது அரசியல் ரீதியில் பா.ஜ.,வுக்கு உதவும் என்பதுடன், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பு மனு தாக்கல்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் அடுத்த மாதம், 10ம் தேதி முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஆக., 6ல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.பார்லிமென்டில் போதிய பலம் உள்ளதால் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி ஏற்கனவே உறுதியாகி விட்டது. இதனால் யாரை வேட்பாளராக அறிவிப்பர் என்று பல யூகங்கள் வெளிவந்த நிலையில், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரை வேட்பாளராக பா.ஜ., அறிவித்துள்ளது.
இது பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் சாதுர்யத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.வரும், 2024ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதை மனதில் வைத்தே, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களை பா.ஜ., தேர்வு செய்துள்ளது.ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்முவை பா.ஜ., அறிவித்தது.
ஆதரவு
ஓட்டு அரசியல், தங்களுடைய அரசியல் எதிர்காலம் என பல காரணங்களால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சி களே, திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை உருவானது.சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்தபோதும், முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தினாலும், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் போன்றவை அவருக்காக பெரிய அளவில் பிரசாரம் செய்யவில்லை.
தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் ஜக்தீப் தன்கரை நிறுத்தியுள்ளதன் வாயிலாக, மிகப்பெரும் அரசியல் சதுரங்கத்தை பா.ஜ., நிகழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் தன்கர். மேலும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.அடுத்தாண்டு ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஜாட் சமூகத்தினர் ஆதரவு, பா.ஜ.,வுக்கு கிடைத்து வந்தாலும், முழுமையாக கவர்வதற்கு, தன்கரின் தேர்வு உதவும்.ராஜஸ்தானை தவிர, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஜாட் பிரிவினர் அதிகம் உள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று கூறப்படுவதையும் பா.ஜ.,வால் தகர்க்க முடியும்.தன்கரின் வெற்றி உறுதி என்றாலும், இந்த மாநிலங்களில், ஜாட் சமூகத்தினர் பிரதிநிதியாக கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
![]() |
விமர்சனம்
அதுபோல, விவசாயிகளின் நண்பர்களாக கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சிகளும், தன்கரை எதிர்த்தால், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரை எதிர்க்கின்றனர் என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்.ஒரு பக்கம் ஜாட் சமூகத்தினர், விவசாயிகளின் ஆதரவை ஈர்ப்பதுடன், எதிர்க்கட்சிகளை அடக்கி வைக்கும் நோக்கத்துடன், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்