பெங்களூரு : ‘மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரு மஹாலட்சுமி லே — அவுட் சட்டசபை தொகுதியில், பல்வேறு வளர்ச்சி பணிகளை, முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று துவக்கி வைத்தார்.
மாநகராட்சி சார்பில், 7 கோடி ரூபாய் செலவில், மாரப்பனபாளையா வார்டின், அசோக் புராவில் கட்டப்பட்ட அம்பேத்கர் சமுதாய பவனை, முதல்வர் திறந்து வைத்தார்.நாகபுரா வார்டின் ராஜ்குமார் சாலையின், மைசூரு சாண்டல் சோப் பேக்டரி சதுக்கத்தில், 4.80 கோடி ரூபாய் செலவில், புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார்.டோபி காட்டில், துணி துவைக்கும் மின் இயந்திர மையமும் திறந்து வைக்கப்பட்டது.வெளிவட்ட சாலையில் இருந்து, ‘வெஸ்ட் ஆப் கார்டு’ சாலை வரை, 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.விருஷபாவதி நகர் வார்டில், பி.இ.எம்.எல்., லே — அவுட்டில், 3.92 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள பாலகங்காதர நாத மஹா சுவாமிகள் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் பொம்மை, ”மெட்ரோ ரயில் திட்டத்தின், மூன்றாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கும்,” என்றார்.கலால் துறை அமைச்சர் கோபாலய்யா பேசியதாவது:ம.ஜ.த.,வை விட்டு விலகி, பா.ஜ.,வுக்கு வந்த எனக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை, உரிய முக்கியத்துவம் அளித்தார். என் தொகுதியான மஹாலட்சுமி லே — அவுட்டுக்கு கேட்ட நிதியுதவி வழங்கியுள்ளார். தொகுதி மக்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில், என்னை தேர்ந்தெடுத்தனர்.பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், ஒன்பது வார்டுகளில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, நான் ஏற்றுள்ளேன். ஹாசன், மாண்டியா மாவட்டங்களின் பொறுப்பையும், முதல்வர் என்னிடம் அளித்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு தக்கபடி பணியாற்றுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பயணியர் எண்ணிக்கை உயர்வு
பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிக்கிறது. ஜூன் 4ல், ஒரே நாளில் 5.7 லட்சம் பேர் பயணித்தனர். ஒரே நாளில் 1.2 கோடி ரூபாய் வருவாய் வசூலானது.பொதுவாக வார இறுதி நாட்களில், வாரத்தின் ஆரம்ப நாட்களில் பயணியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. தினமும் 4.5 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கொரோனாவுக்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டால், 5 லட்சம் பயணியர் என்பது குறைவுதான்.கொரோனாவுக்கு பின், ஐ.டி., நிறுவனங்கள், தங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பளித்துள்ளன. சிலர் கொரோனா பயத்தால், சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பயணியர் எண்ணிக்கை குறைய, இதுவும் ஒரு காரணம். பயணியர் எண்ணிக்கை, ஏறுமுகமாகிறது. விரைவில் பழையபடி 6 லட்சத்தை எட்டும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்