மான்செஸ்டர்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷாப் பன்ட் (125*), ஹர்திக் பாண்ட்யா(71 ரன், 4 விக்.,) அசத்த, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தொடர், 1-1 என சமனில் இருந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பும்ராவுக்கு (முதுகுப்பகுதி பிடிப்பு) பதில் முகமது சிராஜ் இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
பாண்ட்யா திருப்பம்:
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் அதிரடி துவக்கம் தந்தார். ஷமி வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசினார். சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவ்(0), ஜோ ரூட்(0) அவுட்டாகினர். பின் ஜேசன், பென் ஸ்டோக்ஸ் விரைவாக ரன் சேர்த்தனர். சிராஜ், ஷமி ஓவர்களில் பவுண்டரிகளாக அடித்தனர். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஹர்திக் பாண்ட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் ஜேசன் ராயை(41) வெளியேற்றினார். தொடர்ந்து மிரட்டிய இவர், பென் ஸ்டோக்சையும்(27) பெவிலியனுக்கு அனுப்பினார். இங்கிலாந்து அணி 14 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 74 ரன் எடுத்து தத்தளித்தது.

கேப்டன் ஜோஸ் பட்லர், மொயீன் சேர்ந்து, அணியை மீட்டனர். சகால் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் பட்லர். மறுபக்கம் சிராஜ் ஓவரில் மொயீன் அலி 2 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, 18 ரன்கள் எடுக்கப்பட்டன. சகால் ஓவரில் பட்லர், மொயீன் அலி தலா ஒரு சிக்சர் அடித்தனர். ஜடேஜா ‘சுழலில்’ மொயீன்(34) சிக்கினார்.
பட்லர் அரைசதம்:
கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய பட்லர் அரைசதம் கடந்தார். போட்டியின் 37வது ஓவரில் ஹர்திக் மிரட்டினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த லிவிங்ஸ்டனை(27), 3வது பந்தில் அவுட்டாக்கினார். 6வது பந்தில் ‘ஆபத்தான’ பட்லரை(60) வெளியேற்றி நம்பிக்கை தந்தார். 37வது ஓவரில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்தது.
சகால் அசத்தல்:
கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி, ஓவர்டன் தொல்லை கொடுத்தனர். பிரசித் ஓவரில் ஓவர்டன் ஒரு பவுண்டரி, வில்லி ஒரு சிக்சர் அடித்தனர். சகால் வலையில் வில்லி(18) ஓவர்டன்(32), வீழ்ந்தனர். இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4, சகால் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

திணறல் துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, டாப்லே பந்துவீச்சில் அதிர்ந்தது. இவரது வேகத்தில் தவான்(1), ரோகித்(17), கோஹ்லி(17) அவுட்டாகினர். சூர்யகுமாரும்(16) விரைவில் வெளியேற, 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 79 ரன் எடுத்து தவித்தது.பின் ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் அசத்தினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்க, இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஹர்திக் 71 ரன்களுக்கு(55 பந்து, 10 பவுண்டரி) ஸ்டோக்சின் கலக்கல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார்.

முதல் சதம்:
அபார ஆட்டத்தை தொடர்ந்த ரிஷாப், ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை எட்டினார். இதற்கு பின் ‘டாப் கியருக்கு’ மாறிய இவர், ரன் வேகத்தை அதிகரித்தார். வில்லி வீசிய போட்டியின் 42வது ஓவரில் வரிசையாக 5 பவுண்டரி அடித்தார். ரூட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரிஷாப், மின்னல் வேக வெற்றியை தேடித் தந்தார். இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப்(125 ரன், 16 பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா(7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ரிஷாப் பன்ட், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்