ஆடி மாத பிறப்பையொட்டி திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானையூட்டு விழா கோலாகலம்: 63 வளர்ப்பு யானைகள் பங்கேற்பு

பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டையம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் வளர்ப்பு யானைகள் சுமார் 400 உள்ளன. பெரும்பாலும் இங்கு ஆண் யானைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்கள். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் உற்சவம் மூர்த்தியின் திடம்பு ஏந்தி விழாவில் கலந்து கொள்ளும். தற்போது மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வரவுள்ள நிலையில் யானைகளுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் யானைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச் சத்தான உணவுகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.நேற்று ஆடி மாத பிறப்பையொட்டி திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோயிலில் யானையூட்டு திருவிழா நடந்தது. இதில் ஆசியாவிலேயே உயரமான யானை தெச்சிக்கோட்டு ராமசந்திரன், எர்ணாகுளம் சிவக்குமார், குருவாயூர் தேவஸ்தானத்தின் 7 வளர்ப்பு யானைகள் உட்பட 63 வளர்ப்பு யானைகள் கலந்து கொண்டன. 40வது ஆண்டாக நடைபெறும் இந்த யானையூட்டு திருவிழாவில் வயது குறைந்த யானைக்கு உணவளித்து துவங்கி வைப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் இந்த ஆண்டு வயது முதிர்ந்த திருச்சூர் வடக்குநாதர் கோயில் யானை சந்திரசேகரனுக்கு ஆயுர்வேத மருந்து கலந்த உணவு கொடுத்து யானையூட்டு நிகழ்வு துவங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் பொதுமக்கள் உணவும் பழங்களும் கொடுத்தனர். இன்று முதல் ஒரு மாதம் யானைகளுக்கு ஓய்வு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு யானைகளுக்கு ஆயுர்வேத மருந்து கலந்த சாப்பாடு மற்றும் பழங்கள் கரும்பு உள்ளிட்டவை அளித்து மகிழ்ந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.