மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கேரளாவுக்கு அனுப்புவதற்காக மதுரை விளாச்சேரியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் மண்பாண்ட கைவினைஞர்கள் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மண்பாண்டப்பொருட்கள் முதல் கலையம் உள்ள சாமி சிலைகள் வரை தயார் செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண், காகிதக்கூழ்களில் கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது தயாராகியுள்ள விநாயகர் சிலைகள் கேரளா மற்றும் பெங்களூருவுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருகின்றன.
இதுகுறித்து மண்பாண்டக்கலைஞர் ரா.ஹரிகிருஷ்ணன் கூறியது: “கரோனாவால் 2 ஆண்டுகளாக தொழில்கள் முடங்கி இருந்தது. தற்போது பழைய நிலைக்கு திரும்புகிறது. பருவ காலத்திற்கு ஏற்றவாறு மண்பாண்டப்பொருட்கள், சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் உற்பத்தி செய்கிறோம்.
ஆக.31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். இதில் களிமண்ணில் 3 இஞ்ச் முதல் 3 அடி வரையிலும், காகிதக்கூழில் 1 அடி முதல் அதிகபட்சம் 7, 9 அடிகள் வரையிலும் சிலைகள் செய்து தருகிறோம். அளவு, தரத்திற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்கிறோம்.
விநாயகர் சிலை குறைந்தது ரூ. 25 முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. பழைய காகிதங்களின் விலை கடந்தாண்டை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது.
தற்போது ஆன்லைன் மூலம் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து வாய்ப்புகள் வருகின்றன. அவர்களுக்கு பார்சலில் சிலைகளை அனுப்புகிறோம். கேரளா, பெங்களூருவிலிருந்து வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அனுப்புவதற்காக தயார் செய்த சிலைகளுக்கு வர்ணம் பூசி வருகிறோம். கடந்த ஆண்டை விட அதிக ஆர்டர்கள் வந்துள்ளன” என்றார்.