கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சார் பதிவாளர் பழனிவேல், ஒப்பந்த பணியாளர் எழில் பிடிபட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்தில், ராஜேந்திர பட்டினத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் வேல்முருகன் என்பவர், ராஜேந்திர பட்டினம் மற்றும் விருத்தாச்சலத்தில் எங்களுக்கு வீடு உள்ளது. தன்னுடைய நிலத்தை ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட் பதிவு செய்வதற்காக கேட்டுள்ளார்.
அப்பொழுது பொறுப்பு சார்பதிவாளர் பழனிவேல் தான செட்டில்மெண்ட் செய்வதற்கு ரூபாய் 10000 கேட்டுள்ளார். பேரம் பேசிய வேல்முருகன் 7000 கொடுப்பதாக கூறி, அதனை ஒப்புக்கொள்ளவும் வைத்தார். இருந்தாலும் லஞ்சம் கொடுக்க மனம் வராத வேல்முருகன், கடலூர் A. D. S. P தேவராஜன் மற்றும் தலைமை காவலர் சதீஷ் இடம் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேல்முருகனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். இன்று காலை சுமார் 11 மணி அளவில் வேல்முருகன், எழிலிடம் பணம் கொடுக்க, அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் எழில் மற்றும் சார்பதவாளர் பழனிவேலை கையும் களவுமாக பிடித்தனர். அதோடு இதற்கு சாட்சியாக கடலூரிலிருந்து 2 அரசு அதிகாரிகளையும் அழைத்து வந்தனர். சாட்சிகளின் முன்னிலையிலே கைது செய்யப்பட்டனர்.
இந்த செய்தியறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மேலும் அலுவலகத்தை சுற்றி புற்றீசல் போல புரோக்கர்கள் இருப்பதாகவும், அவர்கள் செய்வது தான் ராஜ்ஜியமாக இருப்பதாகவும், அவர்களுக்கும் இதுபோல மணிக்கட்ட யாராவது வருவார்களா என பேசிக்கொண்டே கலைந்தனர்.