வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை தொடர, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை எதிர்த்து, பிக் ஷா சாஹா என்பவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த திரிபுரா உயர் நீதிமன்றம், முகேஷ் அம்பானி மற்றும் அவர் குடும்பத்தினருக்கான அச்சுறுத்தல்களையும், அதன் அடிப்படையில் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தது தொடர்பான ஆவணங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
![]() |
இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘திரிபுராவை சேர்ந்த மனுதாரர், மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி என்ற தனி நபரின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோர முடியாது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மத்திய அரசு அளித்து வரும் பாதுகாப்பை தொடரலாம் என அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement