அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ259 கோடி இழப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: அக்னிபாத் போராட்டத்தின் ஏற்பட்ட வன்முறையால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தால் இந்திய ரயில்வேவிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 23ம் தேதி வரை 2,132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. இந்த போராட்ட காலக்கட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் முழுத் தொகையான 102.96 கோடியும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு விதிகளின்படி, நிற்கும் அல்லது ஓடும் ரயில்கள் மீதான தாக்குதல்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் தான் பொறுப்பு; சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விஷயங்களை மாநிலம்தான் கவனிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அக்னிபாத் போராட்டத்தின் போது நடந்த வன்முறையால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 35 பேர் காயமடைந்தனர். 2,642 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக ​பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.