கர்நாடக அரசியலில் மிக முக்கியத் தலைவராகப் பார்க்கப்பட்டவர் எடியூரப்பா. கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க இரு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன. இந்த நிலையில், இந்தத் தேர்தலில் எடியூரப்பா போட்டியிட மாட்டார் என்று தகவல் வெளியானது. எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனது சிகாரிபுரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார். என்னைவிட விஜயேந்திராவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிகாரிபுரா தொகுதி மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அவர்களைக் கரம் பிடித்துக் கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு மக்கள் எனக்கு தந்ததுபோலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும். அடுத்த தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்றார்.