புதுடெல்லி: ‘காவிரி படுகையில் மேகதாது அணை கட்டுவது உட்பட எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க கர்நாடக அரசுக்கு எந்தவித தகுதியும் கிடையாது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அதனால், ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும், அனைத்து தரப்பும் பதிலளிக்க வேண்டும்,’ என கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.அதன்படி, தமிழக அரசின் பதில் மனுவை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் நேற்று தாக்கல் செய்தார். அதில், ‘கர்நாடகா அரசு பெங்களூரு நகரத்தின் நீர் விநியோகத்துக்காக முறையே 2.80 டிஎம்சி, 9.0 டிஎம்சி வழங்கியது. ஆனால், கடந்த 1986ம் நடந்த திட்டத்தில் பெங்களூரு நகரத்திற்கு என்று எதனையும் தனியாக செய்யவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறைக்காக காவிரியில் புதிய அணை கட்டுவதை ஏற்க முடியாது. அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, காவிரி விவகாரத்தில் சமமான பங்கீட்டு கொள்கையின் அடிப்படையில், அதுவும் குறிப்பாக பெங்களூரு நகர பகுதியின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கும்போது மேகதாவில் புதிய அணை கட்டுவதை ஏற்க முடியாது.கடந்த 9 ஆண்டுகளில், 5 ஆண்டுகள் மட்டும் தென்மேற்கு பருவமழையின் போது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிடாமல் ஏமாற்றியுள்ளது. உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது, மேகதாது அணை அமைப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எந்த ஒரு உரிமையையும் வழங்கவில்லை. அதனால், இந்த ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டால் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாகும். உண்மையை சொல்ல வேண்டுமானால், காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்க கூடிய தனது அதிகார வரம்பிற்குள் மட்டும்தான் செயல்பட முடியும். அதனால், மேகதாது அணை உட்பட எதுவாக இருந்தாலும், காவிரி படுகையில் கர்நாடகா எந்த திட்ட கோரிக்கையையும் முன்வைக்க எந்த தகுதியும் கிடையாது. அதனால், அம்மாநில அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
