தமிழ்நாட்டில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி கட்டணம் உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், அ.தி.மு.க பொருளாளருமான சீனிவாசன், “ஓ.பி.எஸ் ராஜா தேசிங்கு போல வாகனத்தில் அ.தி.மு.க அலுவலகம் செல்கிறார். அங்கு கலவரம் நடத்தி, அலுவலகத்தை சூறையாடி, ஆவணங்களை அள்ளிச் சென்று வீட்டில் வைத்துக் கொண்டார். இதையெல்லாம் போலீஸார் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் சட்டம் இபிஎஸ்-ஸிடம் சாவியைக் கொடுக்க உத்தரவிட்டுவிட்டது.

ஓ.பி.எஸ் அடியாட்களை வைத்து அம்மா உருவாக்கிய அலுவலகத்தை அடித்து நொருக்கி காலால் மிதித்து, அம்மா படத்தை எட்டி உதைத்திருக்கிறார். அதே போன்று வைத்திலிங்கத்தால் கலவரம் செய்ய அழைத்துவரப்பட்டவர்கள் திரும்பும் போது விபத்தில் சிக்கி கால்களை இழந்துள்ளனர். அதற்கு காரணம் அ.தி.மு.க அலுவலகத்தை எட்டி உதைத்ததுதான்.
கழகத்துக்கு ஒரே ஒருவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போல சிங்கம் போல இருக்க வேண்டும் அதற்கு எடப்பாடியே சரியானவர். எம்.எல்.ஏ-க்கள் 75 பேர் எங்களிடம் உள்ளனர். அவரிடம் 3 பேர் கூட இல்லை. அவர் யாருக்கு வேண்டுமானால் பொறுப்பு கொடுத்துக் கொள்ளட்டும். எங்களை விட்டு இந்த சனியன்கள் என்று ஒழிகிறதோ அன்றுதான் நிம்மதி. ஓ.பி.எஸ் கூட்டத்தை இனி அனுமதிக்க மாட்டோம். கட்சியைக் காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு இனி கட்சியில் இடமில்லை. சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

டெல்லியில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கு சென்ற எடப்பாடி உடனடியாக திரும்பி வந்து விடுவேன் என கூறித்தான் சென்றார். அவர் டெல்லியில் 4 நாள்கள் தங்கி யாரையும் பார்க்கும் திட்டம் கிடையாது. உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க அமைச்சர் கையெழுத்திட்டது மின் கட்டணம் உயர்வுக்கு காரணமில்லை. அந்தத் திட்டத்தினை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதன் காரணமாகத்தான் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.
தி.மு.க-வின் கிளை கட்சியாக ஓ.பி.எஸ் அணி செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் கூறியது போல் தொண்டன்தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி தற்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் கழித்து அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம். அரசியல் ஆண்மை இருந்தால் ஓ.பி.எஸ்-ஸை போட்டியிடச் சொல்லுங்கள்” என்றார்.

இதே போல அ.தி.மு.க திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநிலத் துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், “ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ஜோக்கர், அரசியல் முதிர்ச்சியில்லாதவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து என்ன செய்வது என்றே தெரியாமல் திரிகிறார். காமெடி நடிகர் வடிவேல் சினிமாவில் கூறுவது போன்று நானும் ரௌடிதான்… நானும் ரௌடிதான் என்பது போல கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதும் நான்தான் அ.தி.மு.க என்று சொல்லித் திரிவது மக்கள் மத்தியில் நகைபுக்குள்ளாகியுள்ளது.
தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தார். அதனடிப்படையில்தான் நான் உட்பட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம், ஆனால் தற்போது பதவி இல்லை என்றவுடன் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கச் சொல்கிறார். பன்னீர்செல்வம், மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக உள்ளார். அதே போல ஜெயலலிதா மரணத்தில் சசிகலாமீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பின்னர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணைக்கு சென்ற பன்னீர்செல்வம் சசிகலாமீது எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்.

பன்னீர்செல்வத்தால் பதவி பணம் இல்லாமல் இருக்கவே முடியாது. பணம் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் பன்னீர்செல்வம்” என காட்டமாக விமர்சித்தார்.