ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்குப் பிரபலமோ, அவருடைய தலைமுடியும் அந்தளவுக்குப் பிரபலம். ஐன்ஸ்டீன் என்றால், அவருடைய படியாத தலைமுடி நிச்சயம் நினைவுக்கு வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது.

பிரிட்டனின் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள 18 மாதக் குழந்தை லைலா டேவிஸ், Uncombable Hair Syndrome (UHS) எனப்படும் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தலைமுடியானது வறண்டு குச்சிபோல நீண்டு இருக்கும். இதை வாரி படிய வைக்கவே முடியாது. உலகில் 100ல் ஒருவரே இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்படுவார்கள் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளி பொன்னிறம் அல்லது வைக்கோல் நிறத்தில் தலைமுடி நீட்டிக் கொண்டிருக்கும். முதன்முதலில் 1973-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிண்ட்ரோம், மரபணுவில் ஏற்படும் ஜீன் மாறுதல்களால் உருவாகிறது.
இந்நிலையை குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும், பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும்போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம் என அமெரிக்க அரசின் மரபணு மற்றும் அரிய நோய்கள் தகவல் மையம் கூறியுள்ளது.
ஒரு வயதுவரை அவளுடைய முடி பஞ்சு போன்றுதான் இருந்தது, வளரவளர அது வெளியே நீண்டு தெரிய ஆரம்பித்தது என குழந்தையின் தாய் சார்லோட் கூறியுள்ளார்.
இந்தக் குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.