கள்ளச் சாராயம் குடித்த 28 பேர் அவுட்… மோடியின் சொந்த மாநிலத்தில் துயரம்!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பொடாட் மாவட்டம், தண்டுகா தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று கள்ள சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

அதனை குடித்த சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் அனைவரும் பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 23 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரி்க்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மாநிலத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறி்த்து விசாரிக்கவும், போலி மதுபானம் தயாரிப்பவர்களை கண்டறியவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாக பொடாட் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான, கள்ள சாராயத்தை தயாரித்து விற்பனை செய்த மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.