எகிப்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த கொடூர இளைஞரின் மரண தண்டனையை நாடு முழுக்க நேரலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தில் தனது காதலை ஏற்க மறுத்த வகுப்பு தோழியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வயதான முகமது அதெல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுபோன்ற கொடூரம் இனி நாட்டில் ஏற்படுவதை தடுக்க, முகமது அதெலின் தூக்கு தண்டனையை நேரலை செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றம் அளித்த கடிதத்தில், தூக்கு தண்டனைக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே நேரலை செய்யப்படும் எனவும், இதனால் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்டதை நேரலை செய்வதால் ஏற்படுத்தாத மாறுதலை இது ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு எகிப்தில் உள்ள மன்சௌரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே பேருந்திலிருந்து இறங்கியபோது 21 வயதான நைரா அஷ்ரப் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 20 அன்று நடந்த இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், சம்பவப்பகுதியில் இருந்து தப்ப முயன்ற சக மாணவரான முகமது அதெலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இந்த வழக்கில் அதெல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், தம்மை ஏற்க மறுத்த ஒருவர் மீது கருணை காட்டாத ஒருவருக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது என்று நீதிமன்றம் அறிவிப்பதாக தண்டனை தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதெலின் மரண தண்டனையை ரத்து செய்ய அவரது தரப்பு சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.