சென்னையில் 2நாள் முகாமிடும் பிரதமர் மோடி – பயண விவரம் – 7அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: செஸ் ஒலிம்பியாட், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை முழுவதும் மத்தியஅரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மோடியின் இரண்டாவது பயணம் இதுவாகும். ஏற்கனவே கடந்த மே 26ந்தேதி அன்று சென்னைக்கு வந்து,  31,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 2வது முறையாக நாளை மறுதினம் (ஜூலை 28ம் தேதி ) அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது செஸ் ஒலிம்பியாட் மற்றும் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சியின்படி, அவர் அகமதாபாத்தில் இருந்து IAF BBJ விமானம் மூலம் நாளை மறுதினம் (வியாழன் – 28ந்தேதி) மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். விமான நிலையத்திலிருந்து எம்ஐ-17 ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடிற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கை சென்றடைவார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்குப் பிறகு, அவர் சாலை வழியாக ராஜ் பவனுக்குச் சென்று அங்கு இரவு தங்குகிறார்.

அதைத்தொடர்ந்து 29ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கிண்டியில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி,  மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை 11.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் அகமதாபாத்துக்கு புறப்படுகிறார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயா் அதிகாரிகள், சென்னை மாநகர உயா் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிரதமரின் பயணத்தின்போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேரு ஸ்டேடியம் மத்திய காவல்துறையினர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அருகே உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் பாதுகாப்பு வளயைத்திற்குள் உள்ளது.

சென்னை பிரதமர் மோடி,  சென்னை விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் சுமார் முக்கால் மணி நேரம் தங்குகின்றார். அப்போது அவரை தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என தெரிகிறது.

பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ்கள் வழங்குவது?. அவரை சந்திப்பதற்கு யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது? போன்றவைகளும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து பிரதமர் புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமர் மோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.