மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) தமிழ்நாடு வீரர்கள் 3 பேர் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்றுவருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிபன், கார்த்திகேயன் முரளி, வெற்றி பெற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழக வீரர் அதிபன் 37ஆவது நகர்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடரில், ஓபன் பிரிவில் தெற்கு சூடான் வீரர் அஜக்கை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் ஏ பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.
39ஆவது நகர்த்தலில் தஜிகிஸ்தான் வீராங்கனை அப்ரோரோவா சப்ரினாவை வீழ்த்தி வைஷாலி வெற்றி பெற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“