அனைத்துக்கட்சிக் கூட்டம்: அதிமுக அலுவலகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் – பதில் கடிதம் அனுப்பிய ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சியையே பிளவுபடுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். இவ்வாறு நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை பெரிதாகிக்கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 2023 மார்ச் 31 -ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

இந்தச் சமயத்தில், சென்னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்துக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருக்கிரது. அதிமுக அலுவலகம் தற்போது நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரிக்கு ஓ.பி.எஸ் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அதிமுக-வில் மீண்டும் பரபர காட்சிகள் தொடங்கியிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.