சென்னை: “என்.எல்.சியில் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டதை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.