மகாராஷ்டிராவில் கிராமத்தில் பள்ளி செல்ல ஆபத்தான பயணம்: ஆற்றை கடக்க கயிறு பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள மலைக்கிராமத்தில் பள்ளி செல்ல தினமும் ஆற்றை கடந்து குழந்தைகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர். எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்கும் சூழலில், குழந்தைகளை பெற்றோர்கள் தோளில் சுமந்து சென்று ஆற்றின் மறுபுறக் கரையில் விடுகின்றனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் பள்ளி செல்லும் 5 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு தினமும் திண்டாட்டம் தான். காலையில் பெற்றோருடன் கையில் புத்தக பைகளை சுமந்து செல்லும் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. குழந்தைகளை பெற்றோரும், தோளில் சுமந்து சென்று ஆற்றின் மறுபக்கம் விடுகின்றனர். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ஆறு மிகவும் ஆழமானதாக உள்ளது. ஆனால் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்களை தோளில் தூக்கி செல்கிறோம். சில நேரத்தில் பாத்திரத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்கிறோம். இங்கு பாலம் கட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினர். 2 குழந்தைகள் உள்ள ஒரு தந்தை ஒரு பெரிய பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு வருகிறார். பின்னர் குழந்தைகளை பாத்திரத்தில் உட்காரவைத்து அந்த ஆற்றை கடந்து செல்கிறார். குழந்தைகளின் உடை மற்றும் புத்தகம் நீரில் நனைந்து விடாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக்கல்வியை அரசு சட்டபூர்வமாக வழங்க அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதியன்று நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டியுள்ளது. அதாவது சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் மலைக்கிராமங்களில் அடிப்படை வசதி இல்லை என்பதே சமூக ஆர்வலர்களுக்கு கவலையாகும்.      

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.