திருப்பூர்: அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேசவிரோதமா என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் மாநாட்டை கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசினார். இதையடுத்து, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு கருத்தரங்கு நடந்தது.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
மாநாட்டில், சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தனித்தனி இயக்கமாக இருந்தாலும், ஒரே கொள்கை கூட்டத்தை சார்ந்தவர்கள் நாம். நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட உள்ளது. கட்சியின் மாநில மாநாடு நடைபெறும் இந்த வேளையில், இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது மிக பொருத்தமானது. இதன்மூலம் தமிழக அரசு பெருமை அடைகிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவா மற்றும் மகாத்மா காந்தி சந்தித்த சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில், நினைவு மண்டபத்தை தமிழக அரசு அமைக்கும் என அறிவிக்கிறேன்.
நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என்ற இரண்டு ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன. அனைத்து மொழிகள், தேசிய இனத்தவர்களுக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும். இந்தியா அமைதியாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. இத்தகைய சக்திகள்தான் தேசவிரோத சக்திகள். இந்தியாவின் ஒற்றுமைக்கு உலைவைப்பவர்கள் இவர்கள் தான். அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், மொழிகளை ஒன்றாக மதியுங்கள். அனைவரும் ஒரு தாய்மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேசவிரோதமா? இது இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி.
ஒருபக்கம் கல்வி, மருத்துவம், வேளாண்மை, விளையாட்டு, சாலைகள், பாலங்கள் மற்றும் அணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்று உள்ளிட்டவை வளர்க்கப்பட வேண்டும். திராவிட மாடல் அரசின் இரண்டு பக்கங்கள் இவை. வளர்ச்சித் திட்டம் மட்டுமிருந்து, சமூக மேம்பாடு இல்லாமல் போனால் எவ்வித பயனும் இல்லை. மதவாதத்துக்கும், சாதியவாதத்துக்கும் எதிரானது திராவிடம். தமிழ்நாடு என்றால் இடத்தை குறிக்கும். திராவிடம் என்றால் கொள்கையை குறிக்கும்.
சமூக நல்லிணக்கம், மாநில உரிமைகளை பேச இன்று ஒன்று திரண்டுள்ளோம். இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.