மதுரை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இணைந்து நடத்தும் முதல் மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது.
மதுரை விமான நிலையம் அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் கருப்பசாமி கோயில் அருகே இந்த மாநாடு நடக்கிறது. 146 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 47 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 68 டிஎன்டி சமூகத்தினர் என மொத்தம் 261 சமூகத்தினர் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். இதற்காக சமூகம் வாரியாக 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அமைப்புத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பி.ரத்தினசபாபதி, ஒருங்கிணைப்பாளர் செ.விஜயகுமார் உள்ளிட்டோர் கூறியதாவது:
மதுரை விமான நிலையம் அருகே மாநாடு இன்று (ஆக.7) மாலை 3 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்கும். மாலை 4 மணி முதல் பல்வேறு சாதிச் சங்க நிர்வாகிகள், சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பேசுவர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே மாநாட்டின் முக்கிய கோரிக்கை.
பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை, அவர்களது கல்வி, சமுதாய பின்தங்கிய நிலை குறித்து கணக்கெடுக்க வேண்டும். மத்திய அரசு 2011-ல் நடத்திய சாதிவாரி சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களை உடனே வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் 2000-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் அடைந்த கல்வி மற்றும் அரசு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்படும்.
1931-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதை நடத்தினால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்டி சமூகத்தினருக்கு ஏற்பட்ட இழப்பை சரியாகக் கணக்கிட முடியும்.
மேலும் இச்சமூகத்தினரின் பாதுகாப்பு, எஸ்.சி., எஸ்.டி. சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதால் சந்தித்த பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்படும். அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் என யாருக்கும் அழைப்பில்லை. சமூகத் தலைவர்கள், உணர்வுள்ள இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புவோர், இதற்காக உழைப்போர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
யாரையும் அழைக்க வேண்டும் எனக் கருதாமல் சமுதாய உணர்வோடு பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.