சோளம் ,உருளைக்கிழங்கு, மற்றும் தேயிலைக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் வழங்கிய யூரியா பசளையில் 30 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதலான அளவு வட மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் அளவு சுமார் பத்தாயிரம் மெற்றிக் தொன்களாகும். விவசாயிகள் அனைத்து செய்கைகளுக்கும் பசளையை கோரி நிற்பதாக தெரிவித்த விவசாய அமைச்சர், தற்போது கையிருப்பில் பசளை இருப்பதால் அதனை பெரும்போக செய்கைக்காக வழங்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
களைநாசிக்கு தேவையான கிளைபோசெட் மீதான தடையை நீக்குவது குறித்து கண்டறிவதாகவும் பல தரப்பினர் இந்த தடையை நீக்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இந்த தடையை நீக்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.