விருமன்: அதிரடி ஆக்‌ஷன் மசாலா – ஆனால், பழைய கதையும் பழைமைவாதமும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

தவறான வழியில் செல்லும் தந்தையை மகன் எப்படி தட்டித் திருத்துகிறார் என்பதுதான் விருமன் படத்தின் ஒன்லைன்.

வருசநாட்டின் தாசில்தார் முனியாண்டி. அவருக்கு நான்கு மகன்கள். மூன்று மகன்களை முனியாண்டி வளர்க்க, ஒரு மகன் மட்டும் தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்கிறார். தாசில்தார் என்கிற முறையில் ஊரில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களிலும் தன் பங்கை வளைத்துப் போடும் கெட்டிக்காரரான முனியாண்டிக்கு புதிய தலைவலியாக முளைக்கிறார் நான்காவது மகனான விருமன். தந்தை வெர்சஸ் மகன் பஞ்சாயத்துக்கு என்ன காரணம், ஊர் என்று இருந்தால் இன்னும் சில கதாபாத்திரங்கள் இருக்கும்தானே, அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் எப்படி இந்தக் கதைக்குள் வருகிறார்கள் என்பதாக விரிகிறது முத்தையா சினிமேட்டிக் யுனிவர்ஸின் புதிய படமான ‘விருமன்.’

Viruman | விருமன்

சிட்டி, கிராமம் என மாறி மாறி பயணம் செய்யும் கார்த்திக்கு விருமனில் கிராமத்து லுக். தந்தையை யாரேனும் அடித்தால் அடித்த கைக்கு மோதிரம் போடும் மகனாக வந்து நிற்கிறார். கிராமத்துக்கதை என்றாலே கார்த்தி இரண்டு கால்களிலும் சக்கரத்தைக் கட்டி விட்டது போல சிலுப்பிக்கொண்டு சிட்டாய்க் கிளம்பிவிடுவார் போல. ரேபான் கண்ணாடி, முறுக்கு மீசை என ஒவ்வொரு காட்சியிலும் லந்தை பக்காவாகக் கொடுத்திருக்கிறார்.

முனியாண்டியாக பிரகாஷ்ராஜ். குடும்பம் சம்பந்தப்பட்டு அவர் இதுவரை நடித்த படங்களில் செய்த எல்லா கெட்ட விஷயங்களையும் இதில் ஒரே ஆளாகச் செய்கிறார். விருமனின் முறைப்பெண் தேன்மொழியாக அறிமுகம் அதிதி ஷங்கர். துள்ளல் நடனம், குறும்புப் பார்வை, நடிப்பு என எல்லாவற்றிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஒரு பாடலும் பாடியிருக்கிறார். நல்லதொரு அறிமுகம்!

கிராமத்துப் படங்கள் என்றாலே டெம்போவோட டெம்போவாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர், R.K சுரேஷ், சூரி, இளவரசு, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா, வசுமித்ர, நந்தினி, 8 பெரிய மீசைகள் என எல்லோரும் படத்தில் இருக்கிறார்கள். ஏனோ, வேல ராமமூர்த்தியை மறந்துவிட்டார்கள் போல! சூரியின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

Viruman | விருமன்

கடந்த சில ஆண்டுகளாக கிராமத்துப் பேருந்தில் ஏற மாட்டேன் என இருந்த வடிவுக்கரசியை மீண்டும் பழைய கெட்டப்பிலேயே ஏற்றி வில்லிப் பாட்டியாக்கியிருக்கிறார்கள். அவர் ஏன் அவ்வளவு வில்லியாக இருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஏன் கடைசியில் திருந்துகிறார் என்பதும் புரியவில்லை. தலையாரியாக வரும் சிங்கம் புலி சொல்லும் அடுக்கு மொழி வசனங்களை எல்லாம் லொள்ளு சபாவில் நக்கல் அடித்தே இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், அதைவிட அரதப் பழைய வசனங்களை அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். திரையரங்கம் என்பதால் ம்யூட்கூடப் போடமுடியவில்லை.

தனக்கு நன்கு தெரிந்த ஏரியாவிலிருந்து இன்னுமொரு கதையைக் கொண்டு வந்திருக்கிறார் முத்தையா. “அப்பா அடிச்சா குழந்தை அம்மாகிட்ட போய் நிக்கலாம். ஆனா, அம்மா குழந்தைகிட்ட வந்து நிக்கற நிலைமை யாருக்கும் வரக்கூடாது” டைப் வசனங்களில் முத்தையா டச். யுவனின் இசையில் ‘கஞ்சாப்பூவும்’, ‘மதுரை வீரனும்’ ஏற்கெனவே ஹிட். கருமாத்தூர் மணிமாறனின் வரிகளில் உவமைகள் அழகு. சரி, ரெண்டு சீன் முடிஞ்சது, வா சண்ட செய்யலாம் கதையாக சண்டைக் காட்சிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார் அனல் அரசு. ஆனால், சண்டைக்கு மட்டும் 10 லோடு மண் இறக்கியிருப்பார்கள் போல!

Viruman | விருமன்

அடுத்தடுத்து எல்லாமே யூகிக்கக்கூடிய காட்சிகள்தான் என்றாலும், அதை அதிக தொந்தரவில்லாமல் பார்த்துக்கொள்கின்றன செல்வகுமாரின் ஒளிப்பதிவும், வேங்கடராஜின் படத்தொகுப்பும். இரண்டாம் பாதியில் தடம் மாறும் கதையைக் காப்பாற்றுவது முழுக்க முழுக்க கார்த்தி மற்றும் அதிதியின் எனர்ஜி மட்டுமே!

ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு பெண் அடிமைத்தன வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கப்போகிறீர்கள் முத்தையா?! இது கிராமம் அப்படித்தான் என்கிற சால்ஜாப்பைச் சொல்லிக்கொண்டு படைப்பாளி தனக்குப் பிடித்த ஆணாதிக்கத்தைத்தான் வசனங்களாக நுழைக்கிறார். அது விருமனிலும் தொடர்வது பெருஞ்சோகம். சமூகம் மாறிவரும் நிலையில், இன்னமும் “ஆம்பளைன்னு நிரூபி, இல்லன்னா இந்தச் சேலையைக் கட்டிக்கோ”, “பொம்பளைகளை ஏன் முன்னாடி நடக்கவிடறோம் தெரியுமா?”, “பொஞ்சாதின்னா…” டைப் வசனங்கள் எல்லாமே எரிச்சலூட்டுகின்றன. பல வருடங்களாக இந்த டெம்ப்ளேட் புரிதல்கள் மாறாமல் இருப்பது பெரும் சோகம்.

நடிகர்களின் நடிப்பில் இருந்த எனர்ஜி இரண்டாம் பாதியின் திரைக்கதையிலும் இருந்திருந்தால் `விருமன்’ இன்னும் பட்டாசாய் இருந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.