சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில், அசையா சொத்துகளின் பதிவில் மோசடி, போலியான ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்க, பதிவு செய்யும் அலுவலரால் பதிவுக்கு முன்னதாக மூல உரிமை ஆவணம், வில்லங்க சான்றிதழ், வருவாய் ஆவணங்களை சரிபார்த்தல் தொடர்பான பல்வேறு சுற்றிக்கைகள் பதிவுத்துறை தலைவரால் அவ்வப்போது வழங்கப்படுகிறது, இருப்பினும் பொய்யான ஆவணங்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவற்றை ரத்து செய்வதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் அரசை அணுகுகின்றனர். இதுகுறித்து, பொருத்தமான விதிகளை வகுக்க அரசுக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பத்திரங்களை குறிப்பாக,பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பத்திரங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைபதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்கவேண்டும்.
பதிவுச்சட்ட விதிகளில் 22ஏமற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதை கருத்தில் கொண்டு பதிவாளர் ஆவணப்பதிவை ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்தஅதிகாரம் உண்டு.
பதிவு அலுவலர் முறைகேடானபதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லதுஇரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அந்த சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மோசடி பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவுக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து, இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருகிறது.