காந்திநகர் : நாட்டையே உலுக்கிய பில்கீஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இதற்கு ராஜ்ய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான பில்கீஸ் பானோ என்ற 5 மாத கர்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் 7பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 11 பேரை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுவிக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக கருதப்படும் குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
