அகர்தலா: இந்திய – வங்கதேச எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். திரிபுரா மாநிலத்தில் காஞ்சன்பூர் உட்கோட்ட பகுதியில் வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாம் உள்ளது. திரிபுரா தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த தீவிரவாதிகள் பலர் வங்கதேச எல்லை ஒரமாக பதுங்கி உள்ளனர். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேசத்தின் ஜூபுய் என்ற இடத்தில் இருந்த திரிபுரா தேசிய விடுதலை முன்னணி தீவிரவாதிகள் திடீரென பிஎஸ்எப் வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பிஎஸ்எப் வீரர்களும் சுட்டனர். இந்த தாக்குதலில் கிரிஜேஷ் குமார் என்ற வீரர் படுகாயமடைந்தார். அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்தார். இந்த சம்பவத்துக்கு பின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
