கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஏழுசாட்டுபத்து பகுதியை சேர்ந்த பால்துரை என்பவரது மகன் வருண் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான சித்தார்த் என்பவருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமாரி செல்லும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வருண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.