தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். இவர் இன்று பஞ்சாயத்து அலுவலகம் சென்றுவிட்டு, பிற்பகலில் தெற்கு திட்டங்குளம் டு விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் பொன்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதற்கிடையே, தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரைப் பிடித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பா.ஜ.க இளைஞரணி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஊராட்சி மன்றத் தலைவர் கொலைசெய்யப்பட்ட தகவலறிந்து, அவர் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டங்குளம் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பொன்ராஜ் எப்போதும் தலையில் தலைப்பாய் கட்டுடன் இருப்பதால் அவரை ’தலைப்பாய் கட்டுத்தலைவர்’ என்று ஊர் மக்கள் அழைப்பது வழக்கமாம். கொலைசெய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்திருக்கிறார். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோதும்கூட அவர் மனைவி பொன்னுத்தாயை வெற்றிபெறவைத்து தலைவராக்கியிருக்கிறார்.
தினமும் காலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் பொன்ராஜ், மதியம் தனது தோட்டத்துக்குச் செல்வதும், மதியம் அங்கு அவருக்கு அவர் மனைவி பொன்னுத்தாய் உணவு கொண்டு வருவதும் வழக்கமாம். இந்த நிலையில், இன்று மதியம் தோட்டத்துக்குச் சென்ற போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததைக் கண்காணித்த கும்பல், அவரைக் கொலைசெய்துவிட்டதாக போலீஸார் கூறுகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின நாளில் திட்டங்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி கிராமத்தில் ஒரு தரப்பினர் சொல்ல, அதனைக் காதில் வாங்காமல் அலட்சியமாக பதில் கூறினாராம் பொன்ராஜ்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து 36 ஆண்டுகள் அவரும் அவர் மனைவியும் மாறிமாறி தலைவர் பதவி வகித்து வந்ததால் ஊராட்சி நிதியில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதில் கணக்கு வழக்கு குறித்து கேள்வி கேட்டதால் பொன்ராஜுக்கும் ஊரில் மற்றொரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றியது எனவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கைதுசெய்யப்பட்ட இருவரையும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.